மிஜோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் எலிகள் வயலில் விளைந்த தானியங்களை எல்லாம் நாசமாக்கியதால் மக்கள் பட்டினியில் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மிஜோரம் மாநிலத்தில் அமைந்துள்ள காடுகளில் பெருமளவு மூங்கில் வளர்கின்றது. மூங்கில் செடிகளில் பூ பூக்கும் காலத்தில் எலிகள் மூங்கில் மரத்தின் சுவையான அடிப்பாகத்தை சாப்பிட படையெடுக்கின்றன. மூங்கிலில் பூ பூக்கும் காலத்தை மிஜோரம் உட்பட வடகிழக்கு மாநில மக்கள் முட்டம் பருவம் என்று அழைக்கின்றனர்.
மூங்கிலால் கவரப்பட்டு படையெடுக்கும் எலிகள், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆயிரக்கணக்காக பல்கிப் பெருகுகின்றன. இவை பயிர்கள் விளைந்த வயல்களில் புகுந்து, விளைந்த தானியங்களை கபளிகரம் செய்கின்றன. இவைகளை அழிக்கவும், ஒழிக்கவும் அரசு எடுக்கும் எவ்வித நடவடிக்கையும் போதிய பலன் அளிப்பதில்லை.
மிஜோரம் மாநிலத்தில் இந்த வருடம் முட்டம் பருவத்தில், குறிப்பாக மேற்கு மிஜோரோமில் வயல்களில் விளைந்த தானியங்களை எலிகள் அழித்து விட்டன.
இதனால் இந்த பகுதி மக்கள் பட்டினி கிடக்க வேண்டிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. புல்டன்சி என்ற கிராமத்திலும் அதனை ஒட்டியுள்ள பல கிராமங்களில் வாழும் மக்கள் உணவு பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
சக்மா, புரூ இன மக்களில் உள்ள பெரியவர்கள் தினசரி ஒரு வேளை உணவே உட்கொள்கின்றனர். தங்களின் குழந்தைகளுக்கு போதிய உணவு வேண்டும் என்பதற்காக பெரியவர்கள் ஒரு வேளை உணவு உட்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு தானியங்களை விநியோக மையம் புல்டுங்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு 180 மூட்டை அரிசியே இருப்பில் உள்ளது. இது சில நாட்களுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும் என்று அரசு செய்திகள் தெரிவிக்கின்றன.
புல்டுங்சி மற்றும் அதன் அருகில் உள்ள பார்வட்டு, மேற்கு புல்புய் உட்பட அருகில் உள்ள பல கிராமங்களில் உள்ள மக்கள் முழுவதுமாக உணவு தானியத்திற்கு அரசின் கிடங்கையே நம்பி உள்ளனர். இங்கு சில நாட்களுக்கு தேவைப்படும் இருப்பே உள்ளது என்று தெரியவருகிறது.
இந்த வருடம் எலிகளின் படையெடுப்பால் மக்கள் அறுவடை செய்வதற்கு வயல் வெளிகளில் எதுவும் மிச்சமில்லை.
அதே நேரத்தில் சாம்பாய் நகரம் மற்றும் அதன் அருகில் உள்ள மிஜோரம் இளைஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள் முட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.
மிஜோரமில் முட்டம் பருவத்தில் படையெடுக்கும் எலிகளால் சாம்பாய் தான் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட பகுதியாகும். இதனால் இந்த பகுதி இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் அறுவடை செய்த நெல்லில் 25 விழுக்காடு அல்லது அதற்கு சமமான ரூபாயை முட்டம் எலிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று இளைஞ்ர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கிறிஸ்துமஸ்க்கு முன்பு உதவிகள் கிடைத்து விடும் என்று மிஜோரம் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
நன்றி : http://tamil.webdunia.com/
2 கருத்துகள்:
எலி கொழுத்தால் வளைகளில் தங்குவதில்லை.
உண்மைதான் எலித் தொல்லை உழவர்களையும் பாடாய் படுத்துகிறது.
கருத்துக்கு நன்றி கோமதி அவர்களே.
கருத்துரையிடுக