வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 ஆக., 2015

மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

தேன் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
யாருக்கு தேன் தேவைப்பட்டாலும் ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?” என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம் அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே தட்டுப்பாடுதான்!
தேவை இருக்கும் பொருளுக்குத்தானே மரியாதையும் அதிகம். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி மலையை அடுத்துள்ள மந்திரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் போல இவருடைய குடும்பம், கடந்த மூன்று தலைமுறையாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது!

பருத்தி விவசாயியின் வெகுமதி!

அந்தப் பகுதியில் போய் திருஞானசம்பந்தத்தின் தோட்டத் துக்கு வழிகேட்டால் ‘தேன்காரர் தோட்டம்தானே! என்றபடி அனுப்பி வைக்கிறார்கள். தேன் சேகரிக்கும் பணியில் மனைவி ரேவதியுடன் சேர்ந்து, பரபரப்பாக இருந்த திருஞானசம்பந்தம், நம்மைக் கண்டதும் தேனாகப் பேசத்தொடங்கினார்.

”எங்க அப்பாவோட தாத்தா பேரு கந்தசாமி. வெள்ளைக்காரன் காலத்துல இவர், பருத்தி வியாபாரி. ஊர் ஊரா போயி, விவசாயிகள்கிட்ட பருத்தியை கொள்முதல் செய்றப்போ… பல்லடம் பக்கத்துல ஒரு விவசாயி, பருத்திக்காட்டுல பெட்டிகளை வெச்சு, தேன் சேகரிச்சுட்டு இருந்ததைப் பார்த்திருக்காரு. அதுல ஆர்வமாகி, அவர்கிட்ட இருந்து ஒரு பெட்டியை வாங்கிட்டு வந்து, எங்க தோட்டத்துல வெச்சுருக்கார். அதுல நல்லா தேன் கிடைக்கவும், நிறைய பெட்டிகளை வெச்சு, தேனை சேகரிச்சு விக்க ஆரம்பிச்சுருக்காரு. ஒரு கட்டத்துல நல்ல வருமானம் கிடைச்சதால, பருத்தி வியாபாரத்தைக் கைகழுவிட்டு, முழுநேரமா தேனீ வளர்ப்புல இறங்கிட்டாரு.
‘நல்ல வருமானம் கிடைக்குற தேனீ வளர்ப்புத் தொழில் தன்னோட போயிடக்கூடாதுனு மகள் வழி பேரனான என் அப்பா வேலுச்சாமியையும் பழக்கப்படுத்திட்டாரு.
எங்க அப்பா, இன்னிக்கு வரைக்கும் தேனீ வளர்த்து, வருமானம் பாத்துட்டு இருக்காரு. இப்போ நானும், இதுல இறங்கிட்டேன்” என்று முன்கதை சொன்ன திருஞானசம்பந்தம், தொடர்ந்தார்.

வழிகாட்டிய வானொலி!

”ஆரம்பத்துல அப்பாவும், நானும் எங்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு தேனீ வளத்துக்கிட்டிருந்தோம்.
95-ம் வருஷம், ‘ஆல் இன்டியா ரேடியோ’வுல ‘தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பத்தி ‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை பேராசிரியர், முத்துராமன் பேசினாரு. நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கிட்டதும், எனக்கு ஆர்வம் அதிகமாகி அடுத்த நாளே அவரைப் போய் பார்த்தேன். நிறைய சந்தேகங்களைத் தீர்த்து வெச்சு அடுக்குத் தேனீ வளர்ப்புல வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துறதையும் சொல்லிக் கொடுத்தார். அப்பறம், பல்கலைக்கழகத்துல தேனீ வளர்ப்புப் பயிற்சி வகுப்புல சேர்ந்து செயற்கை முறையில ராணித்தேனீயை உருவாக்குற சூட்சமத்தைக் கத்துகிட்டேன். எட்டாம் வகுப்புகூட தாண்டாதவன் நான். இப்ப, என் தோட்டத்துல பல்கலைக்கழக மாணவர்கள் வந்து, தேனீ வளர்ப்புப் பயிற்சியை எடுத்துட்டுப் போறாங்க.
தேனீ வளர்ப்புல பல நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, வழக்கமா செஞ்சுட்டு இருந்த அடுக்குத்தேனீ வளர்ப்பை விட்டுட்டு அதிக மகசூல் கொடுக்குற இத்தாலியத் தேனீக்களை வளக்க ஆரம்பிச்சேன். இப்போ, நானே, ராணித் தேனீக்களை உருவாக்கி, புது காலனிகளை ஏராளமா உருவாக்கிட்டிருக்கேன். அதேமாதிரி, வழக்கமா புகை போட்டுத்தான் தேன் எடுப்பாங்க. நான் புகை இல்லாம தேன் எடுக்குற மாதிரி, சின்னதா ஒரு கருவியை உருவாக்கியிருக்கேன். அதன் மூலமா, ஈக்களுக்கு பாதிப்பில்லாம, தேனை எடுக்க முடியுது” என்ற திருஞானசம்பந்தம், தேனீ வளர்ப்பு பற்றிய சில தொழில்நுட்பங்களையும் பகிர்ந்தார். அதை பாடமாகத் தொகுத்துள்ளோம்.
  
பத்தடி இடைவெளி!

3 ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலியத் தேனீப் பெட்டி ஒன்றின் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய். இதை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலான இடங்களில் ஒன்றரை அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ‘ஸ்டாண்டு’கள் உண்டு. ஒரு பெட்டிக்கும் அடுத்தப் பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில், எறும்பு, பல்லி போன்றவை ஏறாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததில் இருந்து 130 நாட்களில் 3 ஆயிரம் தேனீக்கள் 12 ஆயிரம் தேனீக்களாகப் பெருகிவிடும். இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் இருந்து, 15 நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
ஒவ்வொரு முறை சேகரிக்கும்போதும், 2 கிலோ அளவுக்குக் குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதிலிருந்து நாமே அடுத்த பெட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு பெட்டியிலிருந்து மாதம் சராசரியாக 4 கிலோ அளவுக்கு தேன் கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், பெரியளவில் லாபம் பார்க்க முடியாது.
பொதுவாக தேனீ வளர்த்தால், ஆண்டு முழுவதும் தேன் கிடைக்காது என்று சொல்வார்கள். காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. அதனால்தான் தொடர்ந்து தேன் எடுக்க முடியாமல் போகிறது.
ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும்.’

முருங்கைத் தேனுக்கு கூடுதல் விலை!

தொழில்நுட்பங்களைச் சொல்லி முடித்த திருஞானசம்பந்தம், ”நான், எங்க ஊர்ல இருந்து, 150 கிலோ மீட்டர் தூரம் வரை பெட்டிகளைக் கொண்டு போய் வைக்கிறேன். முருங்கை, கொத்தமல்லி, கடுகு, சூரியகாந்தி, பந்தல் பயிர்கள், தென்னை மாதிரியான பயிர்கள்ல அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்கள்ல பெட்டிகளை வைக்கும்போது, அந்தப் பயிர்களோட மகசூலும் கூடுது. அதனால, விவசாயிகள் அவங்க தோட்டத்துல பெட்டி வைக்கறதுக்கு ஒத்துழைக்கிறாங்க.
அரவக்குறிச்சி, மூலனூர் பகுதிகள்ல நூத்துக்கணக்கான ஏக்கர்ல செடிமுருங்கை விவசாயம் நடக்குது. அந்தப் பகுதிகள்ல எப்பவுமே அதிக அளவுல தேன் கிடைக்கும். அதனால அந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுருக்கேன். முருங்கைத்தேன் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கறதால, அதுக்கு கிராக்கியும் அதிகம். உடுமலைப்பேட்டை, பல்லடம் பகுதிகள்ல, வருஷம் ஒரு போகம் மானாவாரியா நாட்டுக் கொத்தமல்லி விதைப்பாங்க. அது பூவெடுக்கும் சமயத்துல இந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுடுவேன். பொங்கலூர், சுல்தான்பேட்டை பகுதிகள்ல வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகள்லயும் பூவெடுக்குற பருவத்துல பெட்டிகளை வெச்சுடுவேன்.

மாத வருமானம் 1 லட்சம்!

ஒரு பெட்டியிலிருந்து மாசம் சராசரியா 5 கிலோ தேன் கிடைக்கும். 130 பெட்டிகள் மூலமா, மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு தேன் உற்பத்தி செய்றேன். முருங்கைத் தேன் கிலோ 500 ரூபாய்க்கும், மத்த தேன் கிலோ 250 ரூபாய்க்கும் விலை போகுது. 6,500 ரூபாய் முதலீட்டுல ஆரம்பிச்ச இத்தாலியத் தேனீ வளப்பு மூலமா இப்போ, மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்று பெருமிதப் பார்வையை வீசினார்.
நிறைவாக, ”தேனீக்களைப் போல நாமும் சுறுசுறுப்பாக இருந்தாதான் இந்த தொழில்ல லாபம் பாக்க முடியும். பெட்டியை வாங்கி வெச்சுட்டு ‘தேமே’னு உக்காந்து இருந்தா… பல நேரங்கள்ல முதலுக்கே மோசம் வந்துடும்” என்கிற எச்சரிக்கையையும் சொல்லி முடித்தார்.

நிலமே தேவையில்லை…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் இரா. பிலிப்ஸ்ரீதர் தேனீ வளர்ப்புப் பற்றி சொன்ன தகவல்கள்…
”தேனீ வளர்ப்பு லாபகரமான தொழில்களில் ஒன்று. கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட, தேனீ வளர்ப்பு மூலம் சம்பாதிக்க முடியும். தேனீ வளர்ப்பில், ‘விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு’, ‘வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு’ என இரண்டு முறைகள் உள்ளன.
விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத்தேனீப் பெட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது. இம்முறையில், கிடைக்கும் தேனின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால், வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.
வியாபார ரீதியில்… அதாவது, தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும்.
‘எந்த மாதத்தில், எந்த ஊரில் என்ன பயிர் இருக்கும்?’ என்ற தகவல்களைத் திரட்டி, ஒரு வரைபடம் தயார் செய்துகொண்டு… அதன் அடிப்படையில் அந்தந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்தால், அதிகளவில் தேன் அறுவடை செய்யலாம். இம்முறையில், குறைந்தது 100 பெட்டிகளாவது வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். கிட்டத்தட்ட கிடை ஆடு மேய்ப்பது போலத்தான் இத்தாலித் தேனீ வளர்ப்பும். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்தான். ஆடுகளை பகலில் இடம் மாற்றுவோம். தேனீக்களை இரவில்தான் இடம் மாற்ற வேண்டும்.

வில்லங்கமில்லாத விற்பனை வாய்ப்பு !

தேனுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது. முறைப்படி ‘அக் மார்க்’ முத்திரை பெற்று, இதை விற்பனை செய்யும்போது நம்பிக்கை கூடுவதால், விற்பனையும் கூடும். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தினர், அதிகளவில் தேனை கொள்முதல் செய்து, பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். தனியாக, சந்தைப்படுத்த முடியாதவர்கள் இச்சங்கத்தில் விற்பனை செய்யலாம்.
முறையான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், ராணித் தேனீயில் இருந்து ‘ராயல் ஜெல்லி’யை சேகரித்து லட்சக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும்” என்ற பிலிப்ஸ்ரீதர் நிறைவாக,
”நமது நாட்டில் பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெட்டிகளை, பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செழிப்பான பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லாரிகளில் ‘நடமாடும் தேன் உற்பத்திக் கூடங்கள்’ இயங்குகின்றன. அதுபோல இங்கும் வசதிகள் ஏற்பட்டால், இன்னும் ஏராளமானோர் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவார்கள்.
ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி, எங்கள் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி நடத்தி வருகிறோம். ஒரு வேளை அன்று அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதையடுத்த வேலை நாளில் பயிற்சி நடைபெறும். இதற்கு கட்டணம் உண்டு. முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்று சொன்னார்.

தொடர்புக்கு,- டாக்டர். இரா. பிலிப்ஸ்ரீதர், செல்போன்: 94429-18685.

பசுமை விகடன்
 நன்றி :http://ta.vikaspedia.in

12 பிப்., 2009

நிலக்கடலை - கூடுதல் மகசூல்

நிலக்கடலை - கூடுதல் மகசூல்….

நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற நுண்சத்துக் கரைசலை தெளிக்குமாறு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிர் 25 நாள் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. இந்தத் தருணத்தில் ஊட்டச் சத்து உரக் கரைசல் தெளிப்பது மிகவும் அவசியம்.


இதற்கு டிஏபி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் 1 கிலோ, போராக்ஸ் 200 கிராம், தண்ணீர் 200 லிட்டர் தேவை.


முதல் நாள் மாலை 1 கிலோ டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து, அதை 10 லிட்டர் நீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்ட வேண்டும்.


வடிகட்டிய கரைசலுடன் அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போராக்ஸ் 200 கிராம், பொட்டாஷ் 1 கிலோ ஆகியவற்றை கலந்து 1 டேங்குக்கு அரை லிட்டர் வீதம் 20 கலவை தயாரித்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.



இதேபோல, விதைத்த 25 மற்றும் 40-வது நாள் என 2 முறை தெளிக்க வேண்டும்.


பின்னர், பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தான பிளானோபிக்ஸ் 175 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.


இந்த முறைகளைக் கையாண்டால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு, விழுதுகள் அதிகம் உருவாகி, திரட்சியான மணிகள் கிடைக்கும். இதனால் 25 விழுக்காடு கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் வை. கலியபெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .

நன்றி :-
இயற்கை முறையில் இத்தகைய நுண்சத்துக் கரைசலை    தயாரிக்க முடியும் -தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

6 நவ., 2008

திசுவளர்ப்பு வாழை பயிரிடுதல்




திசுவளர்ப்பு என்றால் என்ன ?
செடியின் ஏதேனும் ஒரு பகுதியையோ அல்லது ஒன்றோ அல்லது பல செல்களை கொண்டோ, சோதனை குழாயில், கட்டுப்பாடு மற்றும் சுகாதார நிலையில், பயிர்ப்பெருக்கம் செய்வதாகும்.

பயிர் செய்வதற்கான காலநிலை
 வாழை, ஒரு வெப்பமண்டலம் சார்ந்த பயிராகும். இது 130C-380C வெப்பம் மற்றும் 75-85% ஈரப்பதத்தில் நன்றாக விளைய கூடிய பயிராகும். இந்தியாவில், ஈரப்பதம் உடைய மற்றும் வறண்ட பகுதியில் வாழை பயிரிடப்படுகிறது. வாழை, 120Cக்கு கீழ் பயிரிடப்பட்டால், குளிர்தாக்கம் ஏற்படுகிறது. வாழை சாதாரணமாக, 180C வெப்பத்தில் வளர தொடங்கி, 270C வெப்பத்தில் நன்றாக வளர்ந்து, பின்னர் வளர்ச்சி குறைந்து, 380C வெப்பத்தில் வளர்ச்சி பாதிப்படைகிறது. மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் உள்ள காற்று, பயிரை சேதப்படுத்தும்.

மண்
 வாழைக்கு, நல்ல வடிகால், போதுமான ஈரம் மற்றும் ஊட்டம் நிறைந்த மண்தேவை. அமிலநிலை 6-7.5 உள்ள, ஆழமான மற்றும் செழுமையான, பசளைமண், வாழை சாகுபடிக்கு உகந்த மண்ணாகும். வடிகால் சரியில்லாத மண், காற்றுட்டம் கம்மியாக மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள மண், வாழை சாகுபடிக்கு சரியான மண் அல்ல. உவர் சுண்ணாம்பு மண்ணும் ஏற்றதல்ல. தாழ்ந்த பகுதிகள், மிகவும் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பகுதிகளும் வாழை சாகுபடிக்கு உகந்தது அல்ல.


அதிக அமிலம் மற்றும் காரதன்மையற்ற, அதிக கரிமப்பொருளுடன் அதிக தழைச்சத்து மற்றும் ஏராளமான சாம்பல்சத்து மற்றும் போதுமான மணிச்சத்துடன் கூடிய மண், வாழை சாகுபடிக்கு ஏற்ற மண்ணாகும்.

இரகங்கள்
இந்தியாவில், வாழை, பல வானிலை அமைப்புகளிளும், பல்வேறுபட்ட உற்பத்தி அமைப்புகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, இரகங்கள், தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேர்வு செய்யப்படுகிறது. எனினும் டுவார்ப் கேவென்டீஷ், ரொபாஸ்டா, மொந்தன், பூவன், நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி, கற்பூரவல்லி மற்றும் கிராண்ட்நைன் போன்றவை பிரபலமானவை. இதில் கிராண்ட்நைன், இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த இரகமானது, உயிர்சார்ந்த தாக்கங்களுக்கு, எதிர்ப்புதிறன் உடையதாகவும் மற்றும் நல்ல தரமான தார் அளிப்பதாகவும் இருப்பதால், தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. தாரில், சீப்புகள் நன்கு இடைவெளிவிட்டும், சீப்புகளில் உள்ள பழம், மிக நேராகவும் மற்றும் பெரியதாகவும் இருக்கின்றது. மேலும் பழமானது கண்கவர் ஒருமித்த மஞ்சள் நிறங்களாக மாறவும் செய்கிறது. பழுத்த பழங்கள், ஏனைய இரங்களைவிட தரமானதாகவும், நீண்டநாள் இருக்க கூடியதாகவும் இருக்கிறது.

நிலம் தயாரித்தல்
வாழையை நடுவதற்கு முன், பசுந்தாள் பயிர்களான, டெய்ஞ்சா, தட்டை பயிர் போன்ற பயிர்களை விளைவித்து, அதனை நிலத்தினுள்ளே புதைத்துவிட வேண்டும். நிலத்தை, இரண்டிலிருந்து நான்கு முறை உழுது சமன் செய்ய வேண்டும்.

நிலத்திலுள்ள மண்கட்டிகளை ரோட்டவேட்டர் அல்லது கொத்துக் கலப்பையை கொண்டு நயமாக ஆக்கவும். இவ்வாறு நிலத்தை தயாரிக்கும் பொழுதே அடிஉரமான தொழுஉரத்தை போட்டு, நன்றாக கலந்து விடவும். வாழையை நடுவதற்கு, பொதுவாக 45 செ.மீ × 45 செ.மீ × 45 செ.மீ அளவு கொண்ட குழிதேவை. இந்த குழியை 10கிலோ தொழு உரம் (நன்றாக மக்கியவை), 250கிராம் கார்போ பியூரானுடண் கலந்த மேற்பரப்பு மணலை கொண்டு, நிரப்ப வேண்டும். இவ்வாறு தயார் செய்த குழிகளை, சூரிய ஒளிபடுமாறு விடவேண்டும். இவ்வாறு செய்வதால், அபாயகரமான பூச்சி மற்றும் மண்சார் நேய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், காற்றோட்டத்திற்கும் வழி வகுக்கிறது. உவர்களர் மண்ணில், அமிலத் தன்மை 8 இருக்கும் நிலையில், அங்ககப் பொருளை கலக்கும் வகையில், கலவையை மாற்றி கொள்ள வேண்டும்.

நடவுக்கன்றுகள்
சுமார் 500-1000 கிராம் எடையுள்ள அடிக்கன்றுகள் மூலமே வாழை, பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த அடிக்கன்றுகள் நோய் மற்றும் நூற்புழு தாக்கியதாக இருக்கும். மேலும் இந்த அடிக்கன்றுகள், வயது மற்றும் அளவுகளில் வேறுபடுவதால் பயிர் ஒருமித்து இருக்காது. இதனால் பயிர் நிர்வாகம் மற்றும் அறுவடை போன்றவற்றில் மிகுந்த வேறுபாடுகள் காணப்படும். இதனால் திசு வளர்ப்பில் உருவான வாழை கன்றுகளை நடுவதற்கு சிபாரிசு செய்யப்படுகிறது. இக்கன்றுகள், வளமாகவும், நோயற்றதாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கும். முறையாக கடினமாக்கப்பட்ட, இரண்டாம் நிலை கன்றுகள் நடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

திசு வளர்ப்பில் உருவான நடவுக்கன்றுகளின் நன்மைகள் தாய்ச்செடியிலிருந்து, தூய்மையான கன்றுகளை நல்ல மேலாண்மையில் பெறுவதால், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைவு.

ஒருமித்த வளர்ச்சி மற்றும் மேம்பட்ட மகசூல்.

குறைவான வயது.

வருடம் முழுவதும் கன்றுகள் கிடைக்கப் பெறுவதால், வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.

மிக குறைந்த காலத்தில், தொடர்ச்சியாக 2 மறுதாம்பு பயிர்களை செய்வதன் மூலம் சாகுபடிக்கான செலவை குறைக்கலாம்.

30 மாதங்களில் 3 பயிர்கள். அதனால், இடைவெளி விடப்பட்ட அறுவடை இந்த பயிரில் இருக்காது.

90% - 98% மரங்கள், தார்களை தரக்கூடியதாக இருக்கும்.

கன்று நடுவு காலம் திசு வாழையை வருடம் முழுவதும் நடலாம். மிகக் குறைந்த மற்றும் அதிகமான வெப்பத்தை தவிர்க்க வேண்டும். சொட்டுநீர்ப்பாசனம் மிக முக்கியம்.
கிராண்ட் நைன் இரக வாழை


நடவுமுறை வேர்ப்பந்துக்கு இடையூறு ஆகாத வகையில் செடியிலிருந்து பாலீதின் பைகளை பிரித்தெடுத்து, போலித் தண்டினை தரையிலிருந்து 2 செ.மீ-க்கு கீழாக குழியில் புதைக்க வேண்டும். தண்டினை சுற்றியுள்ள மணலை மெதுவாக அமுக்கி விட வேண்டும். ஆழமாக நடுவதையும் தவிர்க்க வேண்டும்.



நீர் மேலாண்மை வாழை ஒரு நீர் விரும்பும் மரம் ஆகும். இதன் உற்பத்திக்கு நீர் அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால், வாழையின் வேர்களோ நீரை உறிஞ்சுவதில் திறன் குறைந்தவைகள் ஆகும். அதனால், நீர்ப்பற்றாக்குறையுள்ள இன்றைய சூழலில் வாழை சாகுபடி செய்வதற்கு சொட்டு நீர்ப்பாசனம் மிகவும் அவசியமாகும்.

வாழை சாகுபடி, செய்வதற்கு ஒரு வருடத்திற்கு 2000மிமீ, நீர் தேவைப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மற்றும் ஈரப்பராமரிப்பு தொழில் நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் வாழையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகப்படுத்தலாம். வாழையில், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 56% நீரை சேமிப்பதுடன் 23-32% மகசூலையும் அதிகப்படுத்தலாம்.

கன்றினை நட்டவுடன் பாசனம் செய்ய வேண்டும். போதுமான நீரை ஊற்றி நில நீர் கொள்ளளவு திறனை பராமரிக்க வேண்டும். அதிகமான நீர் வேர்பகுதியில் காற்றோட்டத்தைக் குறைத்து வளர்ச்சியை பாதிக்கும். இதனால் சொட்டு நீர் பாசனமே, வாழையின் சிறந்த நீர் மேலாண்மை வழியாகும்.
நன்றி --

11 அக்., 2007

அக்டோபரில் மிளகாய் விதைக்கலாமா ?

தாளிதப் பொருட்களில் மிளகாய் மிகவும் முக்கியமானது ஆகும். அதன் காரத்தன்மை மற்றும் சிவப்பு நிறம் ஆகியவற்றிற்காக மிளகாய் விரும்பப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 15 இலட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 70 இலட்சம் டன் மிளகாய் வத்தல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் சுமார் 12 இலட்சம் டன் மிளகாய் வற்றல் உற்பத்தியாகிறது. மிளகாய் தமிழ்நாட்டில் 49,000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மிளகாய் விதைப்பு அக்டோபர் முதல் நவம்பர் வரை ஆகும். சந்தைக்கு மிளகாய் வரத்து ஜனவரி * ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இருக்கும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், இராமநாதபுரம், பரமகுடி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் சென்னை சந்தைகளிலும் மற்றும் மிளகாய் வர்த்தகர்களிடம் ஆய்வினை மேற்கொண்டனர். சந்தைத் தகவலின்படி, 2005-06ம் வருடத்தில் சீனா இந்தியாவிலிருந்து அதிகளவு மிளகாய் வற்றலை இறக்குமதி செய்தது. இதனால் வரலாறு காணாத விலையாக கிலோவுக்கு ரூபாய் 75 என்ற நிலையை அடைந்தது. அதன் காரணமாக மிளகாய் பரப்பளவு அதிகரித்தது. கடந்த ஆண்டு (2006-07) மிளகாய் சாகுபடியின் பொழுது பெய்த போதுமான மழையினால் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்தது. இதனால் இந்த ஆண்டு குண்டூரில் 45௫0 இலட்ச மூட்டைகளும் (40 கிலோ/மூட்டை), தமிழ்நாட்டில் 15 இலட்சம் மூட்டைகளும் (20 கிலோ/மூட்டை) குளிர்ப்பதனக் கிடங்கில் இருப்பு உள்ளது. இது தவிர தமிழ்நாடு மற்றும் குண்டூர் விவசாயிகளிடம் சுமார் 10௧4 இலட்ச மூட்டைகள் இருப்பு உள்ளது. கடந்த மாதத்தில் (ஆகஸ்டு, 2007) குளிர்ப்பதனக் கிடங்கில் சேமித்த ஒரு கிலோ மிளகாயின் விலை ரூ. 50௫5 ஆகவும், கிடங்கில் வைக்காத மிளகாயின் விலை ரூ.35 ஆகவும் இருந்தது.
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ந.இரவீந்திரன் மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் செல்வி.வ.சி.பிரேமா ஆகியோர் விருதுநகர் சந்தையில் பெறப்பட்ட மிளகாயின் மாத விலைகளை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதன்படி அக்டோபர் மாதத்தில் விதைக்கப்பட்டு ஜனவரி 2008ல் அறுவடை செய்யப்படும் மிளகாய் வற்றலின் விலை குறைந்து, கிலோவிற்கு ரூ.25 முதல் 30 வரையே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குண்டூர் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களிலுள்ள குளிர்ப்பதனக் கிடங்கில் அதிகமான இருப்பு மற்றும் அதிக உற்பத்தி ஆகியன இவ்விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகும்.
எனவே விவசாயிகள் அறுவடைக் காலத்தில் எதிர்பார்க்கப்படும் மிளகாய் வற்றலின் விலையான ரூ.25௩0 என்பதைக் கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் மாதத்தில் மிளகாய் நடவு செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தை www.tnagmark.tn.nic.in என்ற இணையதளத்திலும், tnaudemic@gmail.com என்ற மின் அஞ்சலிலும், 0422 / 2431405 என்ற தொலை பேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் ஆதாரம் : உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்