29 நவ., 2007

10 ஆயிரம் விவசாயிகள் கைது

நெல் குவிண்டாலுக்கு ரூ.1000 வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாட்டில் ரெயில், சாலை மறியலில் ஈடுபட்ட
10 ஆயிரம் விவசாயிகள் கைது

நெல் குவிண்டாலுக்கு ரூ.1000 வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டில் ரெயில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டதாக மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர், நவ. 28-


கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ.1,000 விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால் உயர்ரக நெல்லுக்கு ரூ.775-ம், சராசரி ரகத்துக்கு ரூ.745-ம் நிர்ணயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோதுமைக்கு வழங்கப்படுவது போன்று நெல்லுக்கும் விலை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து இருந்தன.

போராட்டம்
இந்த நிலையில் நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,000 விலை நிர்ணயிக்க மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசு ரூ.100 ஊக்கத்தொகையுடன் நெல்லை கொள்முதல் செய்யக்கோரியும் கம்ïனிஸ்டு ஆதரவு விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் தமிழ்நாட்டில் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் 24 மணி நேர போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததால் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கே மறியல் தொடங்கியது.

தஞ்சை-திருவாரூர்தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பூதலூர், கும்பகோணம், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான், பேராவூரணி உள்பட 35 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 1,798 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் 248 பேர் ஆவர்.

திருவாரூர் ரெயில் நிலையத்தில் காலை 8 மணிக்கு திருச்சி செல்லும் ரெயில் புறப்பட தயாரானது. அப்போது விவசாய சங்க கூட்டமைப்பின் இணை பொதுச் செயலாளர் சத்தியநாராயணன் தலைமையில் விவசாயிகள் ரெயில் முன்பாக தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தினால் 8 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 10 மணிக்கு (2 மணி நேரம் காலதாமதமாக) புறப்பட்டுச் சென்றது.

எம்.எல்.ஏ.க்கள் கைது
திருத்துறைப்பூண்டியில் கே.உலகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் நடந்தது. பஸ், ரெயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை கடை அடைப்பு செய்தார்கள்.

மன்னார்குடி கீழ்பாலத்தில் இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் வை.சிவபுண்ணியம் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை வரை திருவாரூர் மாவட்டத்தில் 36 இடங்களில் சாலை மறியலும், 5 இடங்களில் ரெயில் மறியலும் நடந்தன. சுமார் 2 ஆயிரம் பேர் கைதானார்கள்.

நாகை தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 1,844 ஆண்கள் மற்றும் 369 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 213 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொது செயலாளர் துரைமாணிக்கம் தலைமை தாங்கினார். மறியல் செய்த 24 பெண்கள் உள்பட 371 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, கரம்பக்குடி, கீரமங்கலம் உள்பட 9 இடங்களில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. ஆலங்குடி எம்.எல்.ஏ. ராஜசேகர் உள்பட 600 பேர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.

பாதிப்பு இல்லை
நேற்று ஆங்காங்கே மறியல் நடைபெற்ற போதிலும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ரெயில்களும் வழக்கம் போல் இயங்கின. மறியல் நடைபெற்ற நேரத்தைப் பொறுத்து, போக்குவரத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மன்னார்குடி, கோட்டூர் பகுதிகளில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேதாரண்யத்தில் இருந்து திருச்சி, தஞ்சை செல்லும் பஸ்கள் எதுவும் செல்லவில்லை.

காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமின்றி சேலம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி போன்ற மாவட்டங்களிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. காட்பாடியில் நடந்த போராட்டத்தில் லதா எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் கைதானார்கள்.

10 ஆயிரம் பேர் கைது

தமிழ்நாடு முழுவதும் போராட்டம் காரணமாக 10 ஆயிரம் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நன்றி : தினத் தந்தி

கருத்துகள் இல்லை: