காட்டாமணக்கு மானியம் : சாத்தூர் வர்த்தக சங்கம் வரவேற்பு
எண்ணெய் காட்டாமணக்கு செடி வளர்க்கவும், இதிலிருந்து பயோ-டிசல் தயாரிக்கவும் மானியம் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை சாத்தூர் வர்த்தக மற்றும் தொழில் சங்கம் வரவேற்றுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட தொழில் கொள்கையில் எண்ணெய் காட்டமணக்கு வளர்க்கவும்,. பயோ-டீசல் தயாரிப்பிற்கும் மானியம் வழங்குவதாக அறிவித்தது.
இந்தியா பெட்ரோலிய பொருட்களின் தேவைக்கு வெளிநாடுகளையே நம்பி உள்ளது. இதன் இறக்குமதிக்கான செலவிற்கு நாட்டின் மொத்த அந்நிய செலவாணி சேமிப்பில் 60 விழுக்காடு செலவாகிறது. இந்த சூழ்நிலையில் எண்ணெய் காட்டாமணக்கு வளர்ப்பதற்கும், பயோ டீசல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கும் 50 விழுக்காடு மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் எண்ணெய் காட்டாமணக்கு கொட்டைக்கு கொள்முதல் வரியையும், இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெக்கு 10 வருடம் மதிப்பு கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
டீசலுக்கு மாற்றாக எண்ணெய் காட்டாமணக்கு செடியின் கொட்டையில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெயை டீசலுடன் கலக்க முடியும். சர்க்கரை கழிவு பாகில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எதனால் பெட்ரோலில் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே போல் எண்ணெய் காட்டாமணக்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை டீசலில் கட்டாயமாக கலக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவர வேண்டும்.
பிரிட்டனைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டி.ஐ.ஆயில் என்ற நிறுவனம் பல்வேறு நாடுகளில் எண்ணெய் காட்டமணக்கு செடி வளர்த்து, அதிலிருந்து பயோ-டீசலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் அடுத்த நான்கு வருடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் காட்டாமணக்கு செடியை வளர்க்க உள்ளது.
இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்நிறுவனம் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் காட்டாமணக்கு செடியை பயிரிட போகின்றது. இது தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து எண்ணெய் காட்டாமணக்கு பயிரிட போகிறது. இந்த மாதிரியான பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படாமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி :வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக