நோக்கம்:-
தேங்காய் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் ஆலைகளில் இது கழிவு பொருளாக கிடைக்கிறது. சராசரியாக 10,000 தேங்காய் மட்டைகளில் இருந்து 1 டன் கழிவு கிடைக்கும்.
இவை சாலை ஓரங்களில் குவிக்கப் பட்டு சுற்றுப்புற கேட்டை ஏற்படுத்துகிறது. இதனை பயனுள்ள இயறகை உரமாக மாற்றி வயல்களுக்கு பயன்படுத்தலாம்.
ஏன் மக்கவைக்க வேண்டும்?.
தென்னை நார்க் கழிவினை ஆலைகளில் இருந்து வரும் வடிவத்திலேயே நேரடியாக வயலில் இட்டால் எளிதில மக்காது. மேலும் இக்கழிவில் அதிக அளவு கார்பன் உள்ளதால் வயலில் மக்கும் போது காரபன்-டை-ஆக்சைடு உண்டாகும். இவை வயலில் ஏற்கனவே உள்ள தழைச்சத்தை (நைட்ரஜன்) அமோனியம் கார்பனேட்டாக மாற்றுகிறது. அமோனியம் கார்பனேட்ட் எளிதில் சிதைந்து அமோனியாவாகவும், காரபன்-டை-ஆக்சைடாகவும் மாறி காற்றில் கலந்துவிடுகிறது. இதனால் மண்ணின் தழைச்சது அளவு குறைந்துவிடும். எனவே இதனை மக்கவைத்து பயன்படுத்த வேண்டும்
மக்க வைத்தல்:-
தென்னை நார்க் கழிவினை ‘ புளுரோட்டஸ்’ காளானை கொண்டு மக்கவைப்பதால் விரைவாக (30 நாளில்) கார்பன் அளவு குறைந்துவிடும். மேலும் தழை மற்றும் சாம்பல் சத்துகளின் அளவு தொழுவுரத்தை விட இரு மடங்காக உயர்ந்து சிறந்தா இயற்கை உரமாக மாறுகிறது.
மக்க வைக்கும் முறை:-
தென்னை நார்க் கழிவு உரம் தயாரிக்க 1 டன் தென்னை நார்க் கழிவிற்கு 5 கிலோ யூரியா, 5 புட்டி புளுரோட்டஸ் (சிப்பிக் காளான் ) காளான் வித்தும் தேவை.
நிழலடியில் 15 சதுர மீட்டர் (5 × 3 மீட்டர்) பரப்பளவுள்ள தரையை சம்மாக சீர்படுத்தி 100 கிலோ தென்னை நார்க் கழிவை சீராக பரப்பவும்.
அதன் மீது 1 புட்டி புளுரோட்டஸ் (சிப்பிக் காளான் ) காளான் வித்தினை தூவிவிட வேண்டும்.
பிறகு அதன் மீது அடுத்து 100 கிலோ தென்னை நார்க் கழிவை சமமாக பரப்பவும்.
பிறகு அதன் மீது 1 கிலோ யூரியாவை தூவிவிட வேண்டும்
அதன் மீது அடுத்து 100 கிலோ தென்னை நார்க் கழிவை சமமாக பரப்பவும்.
மீண்டும் அதன் மீது 1 புட்டி காளான் வித்தினை தூவிவிட வேண்டும்.
இவ்வாறு அடுத்தடுத்து 10 அடுக்கு (10 × 100 கிலோ = 1 டன் ) தென்னை நார்க் கழிவை சமமாக பரப்பவும்
பிறகு அதன் மீது நன்றாக தண்ணீர் தெளித்து ஓரு மாதம் வரையிலும் மக்கச்செய்ய வேண்டும்.
கணிசமான ஈரத்தை (சுமார் 200%) தொடர்ந்து பராமரித்து வருதல் அவசியம்.
மக்கிய தென்னை நார்க் கழிவின் கொள்ளளவு பாதியாக் குறைவதோடு பழுப்பு நிறத்திலிருந்து கரும் பழுப்பாக மாறி விடும்.
மக்கிய தென்னை நார்க் கழிவினை உடனேயோ அல்லது சேமித்து வைத்தோ பயன்படுத்தலாம்
கவனிக்க வேண்டியவை:-
1. மக்க வைக்கும் இடம் தாழ்வான பகுதியாக இருக்கக் கூடாது.
2. மக்க வைக்கும் இடத்தில் நிழல் இருக்க வேண்டும்
3. நார்க் கழிவை அடுக்கும் போது ஈரம் இல்லாவிடில் தண்ணீர் தெளித்து அடுக்க வேண்டும்
4. .மக்கும் காலமான 30 நாட்களிலும் நார்க் கழிவில் 200% ஈரம் இருக்க வேண்டும்.
5. 1 டன் நார்க் கழிவை மக்க வைக்க 5 புட்டி புளுரோட்டஸ் (சிப்பிக் காளான் ) காளான் வித்து பயன்படுத்த வேண்டும்.
6. நார்க் கழிவை மக்க வைக்கும் போது, காளான் வித்து, யூரியா ஆகிய எல்லாவற்றையும் ஒன்ளு சேர்த்து கலக்கிவிடக் கூடாது.
தென்னை நார்க் கழிவின் பயன்
• மண்ணின் கரிம்ப்பொருளை அதிகரிக்கிறது.
• இது தன்னுடைய எடையை போல் ஐந்து மடங்கு நீரை ஈர்த்து வைக்க கூடியது.
• தோட்டங்களில் மண்ணிலுள்ள நீரைத் தக்கவைத்துக் கொள்ள இதை போர்வையாக இடலாம்.
• களர், உவர் மற்றும் நல்ல நிலங்களுக்கும் தென்னை நார்க் கழிவு நல்ல பலன் கொடுக்கும்.
• மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் செயல் திறனை அதிகரித்து மண்வளத்தை காக்கிறது.
• மண்ணிலுள்ள மேல் இருக்கத்தை சரி செய்கிறது.
• களைகளைக் கட்டுப்படுத்துகிறது.
எனவே அதிக விலைக்கு விற்கும் இரசாயன உரத்தினை தவிர்த்து வீணாகும் தென்னை நார்க் கழிவை உரமாக்கி பயன்பெறுவோம்.
தகவல் ஆதாரம் : பயிர்ப் பாதுகாப்பு மையம்
தமிழ் நாடு வேளாண் பல்கழைக் கழகம்.
2 கருத்துகள்:
உங்கள் கட்டுரைகள்மிக பயனுள்ள தகவல்கள் உள்ளவை. அவற்றை சற்று செதுக்கி தமிழ் விக்கிபீடியாவிலும் (www.ta.wikipedia.org) பகிர்ந்தால் நன்று. நன்றி.
தங்கள் வருகைக்கு நன்றி நற்கீரரே
விக்கிபீடியாவில் பதிய முயற்சி செய்கிறேன்
கருத்துரையிடுக