11 அக்., 2007

தமிழ்நாட்டின் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி வாய்ப்புகள்


இந்தியாவிலிருந்து வேளாண் விளைபொருள் மற்றும் ஏராளமான இதர பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக வர்த்தகத்தில் 1990 களில் 0.73 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு 2005-06 இல் 1 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக வர்த்தக நிறுவனம் செயல்பட ஆரம்பித்த பின்னரும் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 1995௯6ல் ரூபாய் 20,344 கோடிக்கு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்த இந்தியா 2004-05ல் ரூபாய் 35,963 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2005-06ம் ஆண்டு இது ரூபாய் 50,000 கோடியாக இருக்கும் என்று தெரிய வருகின்றது.

பாசுமதி அரிசி, இதர அரிசி வகைகள், முந்திரி, நறுமணம் மற்றும் தாளிதமூட்டும் பொருட்கள், தேயிலை, பழங்கள், காய்கறிகள், பஞ்சு, நிலக்கடலை, எள் போன்றவை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேற்கூறிய அனைத்துப் பொருட்களும் தமிழ் நாட்டில் இருந்தும் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு தமிழ் நாட்டிலிருந்து என்ன வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்று வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் முனைவர்.ந.இரவீந்திரன், தோட்டக்கலைத்துறை பேராசிரியர் முனைவர்.மு.ஜவகர்லால் ஆகியோர் மேற்கூறிய மூன்று நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டனர். இந்நாடுகளில் முக்கிய வேளாண் விளை பொருட்களின் விலை நிலவரங்கள், அப்பொருட்களின் சுவை, மணம், நிறம், வடிவம், இந்நாடுகளில் வாழும் இந்திய / தமிழ் வம்சா வழியினரின் தேவைகள் இவற்றை ஆய்வு செய்து கீழ்க்கண்ட வேளாண் விளை பொருட்களை இந்நாடுகளுக்கு தமிழ் நாட்டில் இருந்து இலாபகரமாக ஏற்றுமதி செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

மலேசியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ள வேளாண் பொருட்கள்

1.பொன்னி அரிசி 2. இட்லி அரிசி 3. துவரம்பருப்பு 4. உளுந்து 5.பச்சைப்பயிறு 6. கேரட், பச்சைப்பட்டாணி, பிரகோலி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், முள்ளங்கி, வெண்டை ஆகிய காய்கறிகள் 7. மாதுளை, சப்போட்டா, திராட்சை, மா மற்றும் மாண்ட்ரின் வகை ஆரஞ்சுப்பழங்கள் 8.சிவப்புக் கொய்யா மற்றும் செவ்வாழைப்பழங்கள் 9.மசாலாப்பொடிகள்.

தாய்லாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ள வேளாண் பொருட்கள்

1.பொன்னி அரிசி 2. இட்லி அரிசி 3. துவரம்பருப்பு 4. உளுந்து 5.பச்சைப்பயிறு 6. சின்ன வெங்காயம், பாகற்காய், முருங்கை, சிறிய இரகக் கத்தரிக்காய், கொத்தவரை, சேனைக்கிழங்கு, வெண்டை ஆகிய காய்கறிகள் மற்றும் கறிவேப்பிலை 7. மா மற்றும் சப்போட்டா பழங்கள்.

சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ள வேளாண் பொருட்கள்

1.பொன்னி அரிசி, 2. பச்சரிசி, 3. இட்லி அரிசி, 4. மக்காச்சோளம், 5. துவரம்பருப்பு, 6. உளுந்து, 7. பச்சைப்பயிறு மற்றும் இதர பயறு வகைகள் 8. முருங்கை, சின்னக் கத்தரி, வெண்டை, அவரை, சிறிய உருளைக்கிழங்கு, வெங்காயம் (சிறியது மற்றும் பெரியது), சேனைக் கிழங்கு, கோவைக்காய் ஆகிய காய்கறிகள் 9. திராட்சைப்பழம், மாம்பழம் 10. புளி 11. மிளகாய் வத்தல், 12. கறிவேப்பிலை, 13. வெற்றிலை, 14. மல்லி மற்றும் முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, அரளி, துளசி மற்றும் மருவு (தவனம்) ஆகிய பூ வகைகள் 15. நெய் அனைத்து எண்ணெய் வகைகள் 16. நிலக்கடலை மற்றும் எள் பரிப்பிகள் 17. பட்டாணிக்கடலை, 18. தேன், 19. உலர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் 20. பப்படம் / அப்பளம், 21. பொரித்த பருப்புகள், 22. மசாலாப் பொடிகள் 23. அரிசி அவல், 24. கடலை 25. பேரீட்சை மற்றும் பிற மளிகைச் சாமான்கள்.

தமிழ்நாட்டிலிருந்து மாதிரிக்கு (Sample) அனுப்பப்படுபவை தரமாக உள்ளன. ஆனால் ஒட்டு மொத்தமாக ஏற்றுமதி செய்யும் போது அந்தத்தரம் இருப்பது இல்லை என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல, முதல் இரண்டு அல்லது மூன்று முறைகள் அனுப்பும்போது பொருட்கள் நல்ல தரமாக உள்ளன. பின்னர் போகப் போக தரம் குறைந்து விடுகின்றன என்றும் இவர்கள் கூறியுள்ளனர். அதே போல் என்ன விலையானாலும் ஏற்றுமதியை தொடர்ந்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் விலை ஏறும் போது ஏற்றுமதியை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தை www.tnagmark.tn.nic.in என்ற இணையதளத்திலும், tnaudemic@gmail.com என்ற மின் அஞ்சலிலும், 0422 / 2431405 என்ற தொலை பேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் ஆதாரம் : உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்

கருத்துகள் இல்லை: