6 நவ., 2008

திசுவளர்ப்பு வாழை பயிரிடுதல்




திசுவளர்ப்பு என்றால் என்ன ?
செடியின் ஏதேனும் ஒரு பகுதியையோ அல்லது ஒன்றோ அல்லது பல செல்களை கொண்டோ, சோதனை குழாயில், கட்டுப்பாடு மற்றும் சுகாதார நிலையில், பயிர்ப்பெருக்கம் செய்வதாகும்.

பயிர் செய்வதற்கான காலநிலை
 வாழை, ஒரு வெப்பமண்டலம் சார்ந்த பயிராகும். இது 130C-380C வெப்பம் மற்றும் 75-85% ஈரப்பதத்தில் நன்றாக விளைய கூடிய பயிராகும். இந்தியாவில், ஈரப்பதம் உடைய மற்றும் வறண்ட பகுதியில் வாழை பயிரிடப்படுகிறது. வாழை, 120Cக்கு கீழ் பயிரிடப்பட்டால், குளிர்தாக்கம் ஏற்படுகிறது. வாழை சாதாரணமாக, 180C வெப்பத்தில் வளர தொடங்கி, 270C வெப்பத்தில் நன்றாக வளர்ந்து, பின்னர் வளர்ச்சி குறைந்து, 380C வெப்பத்தில் வளர்ச்சி பாதிப்படைகிறது. மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் உள்ள காற்று, பயிரை சேதப்படுத்தும்.

மண்
 வாழைக்கு, நல்ல வடிகால், போதுமான ஈரம் மற்றும் ஊட்டம் நிறைந்த மண்தேவை. அமிலநிலை 6-7.5 உள்ள, ஆழமான மற்றும் செழுமையான, பசளைமண், வாழை சாகுபடிக்கு உகந்த மண்ணாகும். வடிகால் சரியில்லாத மண், காற்றுட்டம் கம்மியாக மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள மண், வாழை சாகுபடிக்கு சரியான மண் அல்ல. உவர் சுண்ணாம்பு மண்ணும் ஏற்றதல்ல. தாழ்ந்த பகுதிகள், மிகவும் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பகுதிகளும் வாழை சாகுபடிக்கு உகந்தது அல்ல.


அதிக அமிலம் மற்றும் காரதன்மையற்ற, அதிக கரிமப்பொருளுடன் அதிக தழைச்சத்து மற்றும் ஏராளமான சாம்பல்சத்து மற்றும் போதுமான மணிச்சத்துடன் கூடிய மண், வாழை சாகுபடிக்கு ஏற்ற மண்ணாகும்.

இரகங்கள்
இந்தியாவில், வாழை, பல வானிலை அமைப்புகளிளும், பல்வேறுபட்ட உற்பத்தி அமைப்புகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, இரகங்கள், தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேர்வு செய்யப்படுகிறது. எனினும் டுவார்ப் கேவென்டீஷ், ரொபாஸ்டா, மொந்தன், பூவன், நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி, கற்பூரவல்லி மற்றும் கிராண்ட்நைன் போன்றவை பிரபலமானவை. இதில் கிராண்ட்நைன், இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த இரகமானது, உயிர்சார்ந்த தாக்கங்களுக்கு, எதிர்ப்புதிறன் உடையதாகவும் மற்றும் நல்ல தரமான தார் அளிப்பதாகவும் இருப்பதால், தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. தாரில், சீப்புகள் நன்கு இடைவெளிவிட்டும், சீப்புகளில் உள்ள பழம், மிக நேராகவும் மற்றும் பெரியதாகவும் இருக்கின்றது. மேலும் பழமானது கண்கவர் ஒருமித்த மஞ்சள் நிறங்களாக மாறவும் செய்கிறது. பழுத்த பழங்கள், ஏனைய இரங்களைவிட தரமானதாகவும், நீண்டநாள் இருக்க கூடியதாகவும் இருக்கிறது.

நிலம் தயாரித்தல்
வாழையை நடுவதற்கு முன், பசுந்தாள் பயிர்களான, டெய்ஞ்சா, தட்டை பயிர் போன்ற பயிர்களை விளைவித்து, அதனை நிலத்தினுள்ளே புதைத்துவிட வேண்டும். நிலத்தை, இரண்டிலிருந்து நான்கு முறை உழுது சமன் செய்ய வேண்டும்.

நிலத்திலுள்ள மண்கட்டிகளை ரோட்டவேட்டர் அல்லது கொத்துக் கலப்பையை கொண்டு நயமாக ஆக்கவும். இவ்வாறு நிலத்தை தயாரிக்கும் பொழுதே அடிஉரமான தொழுஉரத்தை போட்டு, நன்றாக கலந்து விடவும். வாழையை நடுவதற்கு, பொதுவாக 45 செ.மீ × 45 செ.மீ × 45 செ.மீ அளவு கொண்ட குழிதேவை. இந்த குழியை 10கிலோ தொழு உரம் (நன்றாக மக்கியவை), 250கிராம் கார்போ பியூரானுடண் கலந்த மேற்பரப்பு மணலை கொண்டு, நிரப்ப வேண்டும். இவ்வாறு தயார் செய்த குழிகளை, சூரிய ஒளிபடுமாறு விடவேண்டும். இவ்வாறு செய்வதால், அபாயகரமான பூச்சி மற்றும் மண்சார் நேய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், காற்றோட்டத்திற்கும் வழி வகுக்கிறது. உவர்களர் மண்ணில், அமிலத் தன்மை 8 இருக்கும் நிலையில், அங்ககப் பொருளை கலக்கும் வகையில், கலவையை மாற்றி கொள்ள வேண்டும்.

நடவுக்கன்றுகள்
சுமார் 500-1000 கிராம் எடையுள்ள அடிக்கன்றுகள் மூலமே வாழை, பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த அடிக்கன்றுகள் நோய் மற்றும் நூற்புழு தாக்கியதாக இருக்கும். மேலும் இந்த அடிக்கன்றுகள், வயது மற்றும் அளவுகளில் வேறுபடுவதால் பயிர் ஒருமித்து இருக்காது. இதனால் பயிர் நிர்வாகம் மற்றும் அறுவடை போன்றவற்றில் மிகுந்த வேறுபாடுகள் காணப்படும். இதனால் திசு வளர்ப்பில் உருவான வாழை கன்றுகளை நடுவதற்கு சிபாரிசு செய்யப்படுகிறது. இக்கன்றுகள், வளமாகவும், நோயற்றதாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கும். முறையாக கடினமாக்கப்பட்ட, இரண்டாம் நிலை கன்றுகள் நடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

திசு வளர்ப்பில் உருவான நடவுக்கன்றுகளின் நன்மைகள் தாய்ச்செடியிலிருந்து, தூய்மையான கன்றுகளை நல்ல மேலாண்மையில் பெறுவதால், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைவு.

ஒருமித்த வளர்ச்சி மற்றும் மேம்பட்ட மகசூல்.

குறைவான வயது.

வருடம் முழுவதும் கன்றுகள் கிடைக்கப் பெறுவதால், வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.

மிக குறைந்த காலத்தில், தொடர்ச்சியாக 2 மறுதாம்பு பயிர்களை செய்வதன் மூலம் சாகுபடிக்கான செலவை குறைக்கலாம்.

30 மாதங்களில் 3 பயிர்கள். அதனால், இடைவெளி விடப்பட்ட அறுவடை இந்த பயிரில் இருக்காது.

90% - 98% மரங்கள், தார்களை தரக்கூடியதாக இருக்கும்.

கன்று நடுவு காலம் திசு வாழையை வருடம் முழுவதும் நடலாம். மிகக் குறைந்த மற்றும் அதிகமான வெப்பத்தை தவிர்க்க வேண்டும். சொட்டுநீர்ப்பாசனம் மிக முக்கியம்.
கிராண்ட் நைன் இரக வாழை


நடவுமுறை வேர்ப்பந்துக்கு இடையூறு ஆகாத வகையில் செடியிலிருந்து பாலீதின் பைகளை பிரித்தெடுத்து, போலித் தண்டினை தரையிலிருந்து 2 செ.மீ-க்கு கீழாக குழியில் புதைக்க வேண்டும். தண்டினை சுற்றியுள்ள மணலை மெதுவாக அமுக்கி விட வேண்டும். ஆழமாக நடுவதையும் தவிர்க்க வேண்டும்.



நீர் மேலாண்மை வாழை ஒரு நீர் விரும்பும் மரம் ஆகும். இதன் உற்பத்திக்கு நீர் அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால், வாழையின் வேர்களோ நீரை உறிஞ்சுவதில் திறன் குறைந்தவைகள் ஆகும். அதனால், நீர்ப்பற்றாக்குறையுள்ள இன்றைய சூழலில் வாழை சாகுபடி செய்வதற்கு சொட்டு நீர்ப்பாசனம் மிகவும் அவசியமாகும்.

வாழை சாகுபடி, செய்வதற்கு ஒரு வருடத்திற்கு 2000மிமீ, நீர் தேவைப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மற்றும் ஈரப்பராமரிப்பு தொழில் நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் வாழையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகப்படுத்தலாம். வாழையில், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 56% நீரை சேமிப்பதுடன் 23-32% மகசூலையும் அதிகப்படுத்தலாம்.

கன்றினை நட்டவுடன் பாசனம் செய்ய வேண்டும். போதுமான நீரை ஊற்றி நில நீர் கொள்ளளவு திறனை பராமரிக்க வேண்டும். அதிகமான நீர் வேர்பகுதியில் காற்றோட்டத்தைக் குறைத்து வளர்ச்சியை பாதிக்கும். இதனால் சொட்டு நீர் பாசனமே, வாழையின் சிறந்த நீர் மேலாண்மை வழியாகும்.
நன்றி --

கருத்துகள் இல்லை: